புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பர் 17-ம் தேதி கேஜ்ரிவால் அரசு, புதிய மதுபான கொள்கையை அமல் செய்தது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.2,800 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை, சிபிஐ தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
வழக்கில் குற்றம் சாட்டப்பட் டுள்ளன டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 19-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் சிசோடியா நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் சனிக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது. அதில்,ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டது. தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த சூழலில் என்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது. எனவே ஒரு வாரம் அவகாசம் அளித்து வேறு தேதியை ஒதுக்குமாறு சிபிஐயிடம் கோரியுள்ளேன். நான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். இவ்வாறு சிசோடியா தெரிவித்துள்ளார்.
சிபிஐ வட்டாரங்கள் கூறும் போது, “சிசோடியாவுக்கு புதிதாக சம்மன் அனுப்பப்படும்” என்று தெரிவித்தன.