திருச்சி காங்., – எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி:
சீமான் அதிகமாக பேசுகிறார். பல நேரம் அடுத்தவர்களை நீ, நான், வாடா, போடா என பேசுவது நாகரிகமாக இல்லை. எந்த தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியாது. அரசியலில் தரக்குறைவாக பேசுபவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். எம்.ஜி.ஆருடன் பிரபாகரன் காலை உணவு உண்டபோது, பிரபாகரனை பார்த்துள்ளேன். அதற்காக நான், அவரை பார்த்துள்ளேன்; இவரை பார்த்துள்ளேன் என எப்போதும் கூறியதில்லை.
எம்.ஜி.ஆரும், பிரபாகரனும் டிபன் சாப்பிட்டப்ப, நீங்க கூட சேர்ந்து சாப்பிட்டீங்களா… ஆனா, சீமான், பிரபாகரன் கூட சேர்ந்து ஆமைக்கறியே சாப்பிட்டிருக்கார், தெரியுமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
‘அனைத்து துறைகளின் வளர்ச்சியை உள்ளடக்கியதுதான் திராவிட மாடல்’ என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளூர் விசைத்தறிகள் மற்றும்கைத்தறிகளில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நேர்மாறாக, தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்து வழங்க இருப்பதால், உள்ளூர் விசைத்தறி, கைத்தறி தொழில்கள் நசிந்து விட்டனவே… இது தான் திராவிட மாடலா என்று கேட்கத் தோன்றுகிறது.

உள்ளூரில் உற்பத்தி செய்தால், ஆளுங்கட்சியினருக்கு ஏதாவது, ‘பலன்’ கிட்டுமான்னு சொல்லுங்க பார்ப்போம்!
ம.தி.மு.க., பொதுச் செயலர்வைகோ அறிக்கை:
கர்நாடகசட்டசபையில், அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், ‘காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில், கர்நாடகா உறுதியாக உள்ளது. அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் தயாராக உள்ளது’ என, குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முனைந்திருப்பதும், ஆளும், பா.ஜ., அரசு பட்ஜெட்டில் குறிப்பிட்டிருப்பதும் கண்டனத்துக்கு உரியது.
அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியும், உங்க கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களான காங்கிரசாரை, மேகதாது திட்டத்துக்கு கண்டனம் தெரிவிக்க சொல்லலாமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வாக்காளர்களை, பட்டியில் அடைப்பது போல அடைக்கின்றனர்; காலை, மாலை சிற்றுண்டி, மதியம் பிரியாணி, 1,000 ரூபாய் வழங்குகின்றனர். ‘திருமங்கலத்தை’ மிஞ்சும் அளவுக்கு, இந்த இடைத்தேர்தல் உள்ளது. பதவிக்காக எதையும் செய்யும் கூட்டம், தி.மு.க., என்பதை, கருணாநிதி காலத்திலேயே நிரூபித்து விட்டனர்.

ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை, மாமல்லபுரம் அருகே கூவத்துார்ல அடைச்சி வச்சிருந்ததுக்கு பெயர் என்னவாம்?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்