புழல்: செங்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாக்கம் சாலையில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிகரித்து, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இதேபோல் பல்வேறு பகுதி சாலைகளிலும் கழிவுநீர் தேங்கி நிற்பதை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்குன்றம்-நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதி சாலைகளை ஒட்டிய வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலைகளில் திறந்துவிடப்படுகிறது.
இதனால் சோத்துப்பாக்கம் சாலையில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொசுக்கள் அதிகரித்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் மற்றும் நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் சீருடை அணிந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள்மீது வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் சிதறி, அவர்களின் உடைகளை நாசமாக்கி வருகின்றன.
கழிவுநீர் தேங்கிய சாலைகளை கடந்து செல்ல இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, செங்குன்றம்-நாரவாரிக்குப்பம் பேரூராட்சி சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை முறையாக அகற்றி சீரமைத்து, அப்பகுதி சாலைகளில் கழிவுநீரை திறந்துவிடும் நபர்கள்மீது பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.