சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்.20) எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், IND-TN-06-MO-3051 என்ற பதிவெண் கொண்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும், இச்சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாக்கி-டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலங்கை நாட்டினர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், காயமடைந்துள்ள மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், ஒன்றிய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும், தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தில் படுகாயமுற்று தற்போது கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்கை பெற்றுவரும் முருகன் என்பவருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.