நாகூர்: ராஜஸ்தானில் திருமணமான காதலியை துண்டு துண்டாக வெட்டி கிணறு உள்ளிட்ட இடங்களில் வீசியெறிந்த காதலனை போலீசார் கைது செய்தனர். 25 நாட்களுக்கு பின் துப்பு கிடைத்ததால் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டம் பாலசார் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான குட்டி என்ற இளம்பெண், தனது தாய் வீட்டில் இருந்து கடந்த ஜனவரி 20ம் தேதி முண்டாசரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அங்கு போய் சேரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பல இடங்களில் தேடிப் பார்த்தும் அந்தப் பெண்ணை காணவில்லை. அதையடுத்து பாலாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்கள் வழக்குபதிவு செய்து அந்தப் பெண்ணை தேடி வந்தனர். கடந்த 25 நாட்களுக்கு மேலாக தேடி வந்த நிலையில், நாகூர் நகரின் மால்வா சாலையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பின்புறமுள்ள புதர்களில் பெண்ணின் உடைகள், முடி, உடல் பாகங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. தகவலறிந்த போலீசார் புதரில் கிடந்த பெண்ணின் உடைகளையும், இதர தடயங்களையும் மீட்டு குட்டியின் உறவினர்களை அழைத்து விசாரித்தனர். மீட்கப்பட்ட உடையில் ரத்தக் கறை இருந்ததால் குட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பவ நாளன்று பாலசார் கிராமத்தை சேர்ந்த அனோபராம் என்பவர் அந்தப் பெண்ணை பைக்கில் அழைத்து சென்றதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து அனோபராமை போலீசார் தேடி பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் அந்தப் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதை ஒப்புக் கொண்டார். பின்னர் கொலையான பெண்ணின் சடலம் குறித்து விசாரித்த போது, தெர்வா கிராமத்திற்கு அருகில் உள்ள கிணறு மற்றும் பல பகுதிகளில் அந்தப் பெண்ணின் உடல் பாகங்களை வீசி எறிந்ததாக கூறினார். அதையடுத்து அந்தப் பெண்ணின் உடலை போலீசார் கடந்த 3 நாட்களாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நாகூர் எஸ்பி ராமமூர்த்தி ஜோஷி கூறுகையில், ‘கொலையான குட்டியை அவரது உறவினரான அனோபராம் காதலித்து வந்துள்ளார். சம்பவ நாளன்று, தனது தாய் வீட்டில் இருந்து மாமியார் வீட்டிற்கு குட்டி சென்ற போது அவரை மடக்கியுள்ளார்.
பின்னர் குட்டியை கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி தனது பைக்கில் அனோபராம் அழைத்து சென்றார். மேலும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு குட்டி மறுப்பு தெரிவித்ததால், அவரை துண்டு துண்டாக வெட்டி அவரது உடல் பாகங்களை கிணறு உள்ளிட்ட இடங்களில் வீசி எறிந்துள்ளார். தற்போது கிணறு உள்ளிட்ட இடங்களில் வீசப்பட்ட உடல் பாகங்களை மீட்புக் குழுவினர் 3 நாட்களாக தேடி வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் உடல் பாகங்கள் வீசப்பட்டதால், ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனோபராமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்’ என்றார். ெடல்லியில் சமீபத்தில் லிவ்-இன் காதலி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டது போன்று, ராஜஸ்தானிலும் காதலி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.