இஸ்லாமாபாத் : திவாலான நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அரசியல்வாதிகள் தான் என்றும், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா முகமத் ஆசிப் பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இங்குள்ள சாமானிய மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் சியோல்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில், அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா பேசியதாவது:
நம் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1 லிட்டர் பால், 250 ரூபாய்க்கும், கோழி இறைச்சி 1 கிலோ, 780 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தொடர்ந்து அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் நாடு முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் திவாலாகப் போகிறது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்; அது ஏற்கனவே நடந்து விட்டது. தற்போது நாம் திவாலான நாட்டில் தான் வாழ்ந்து வருகிறோம். நாட்டில் உள்ள பிரச்னைக்கு தீர்வு நம்மிடம் தான் உள்ளது; சர்வதேச நிதியத்திடம் இல்லை.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு சட்டம், அரசியலமைப்பு முறையாக பின்பற்றப்படாததுதான் காரணம். இதற்கு அதிகாரத்துவம் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட அனைவருமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement