அகமதாபாத் – மும்பை இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் வரும் 2026-ல் புல்லட் ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில், அதிவேக ரயில் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அதிகபட்சமாக 600 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நம் நாட்டில் தற்போது 170 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை இயக்கி வருகிறோம்.
இந்நிலையில், அகமதாபாத் – மும்பை புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து, தற்போது பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்காக, தேசிய அதிவேக ரயில் கழகம் எனும் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன், குஜராத்தின் சபர்மதி – மும்பையின் பாந்த்ரா – குர்லா காம்ப்ளக்ஸ் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் இயக்க தனி வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
குஜராத்தில் 8, மகாராஷ்டிராவில் 4 என மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இடம்பெற உள்ளன. இதில் 465 கி.மீ. உயர்நிலை பாலமாகவும், 9.8 கி.மீ. தூரம் ஆறுகளை கடந்து செல்லும் வகையில் பாலங்கள் அமைத்தும், 6.75 கி.மீ. தூரம் வளைவுகள் அமைத்தும், 14 கி.மீ. சுரங்கப் பாதையிலும், 7 கி.மீ. கடலுக்கு அடியிலும், 5.22 கி.மீ. பகுதி பாறைகளை குடைந்தும் இதற்கான வழித்தடம் அமைக்கப்படுகிறது. ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 98 சதவீதம் முடிந்துவிட்டன. கட்டுமானப் பணிகள் தொடங்கி தற்போது 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. எஞ்சியுள்ள பணிகளை முடித்து 2026-ல் ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் 260 கி.மீ. முதல் அதிகபட்சமாக 320 கி.மீ. வேகத்தில் செல்லும். வழக்கமாக மும்பை – அகமதாபாத்துக்கு ரயிலில் செல்ல 6 மணி நேரம் ஆகும். புல்லட் ரயிலில் 2 மணி 7 நிமிடத்தில் சென்றுவிட முடியும்.
இந்த ரயில் திட்டத்துக்கான பெட்டி, தொழில்நுட்பம், கடனுதவி ஆகியவை ஜப்பானிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. ஜப்பானின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தில் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புல்லட் ரயில் 10 பெட்டிகளை கொண்டது. இதில் முதல் வகுப்பு, உயர் வகுப்பு, சிறப்பு உயர் வகுப்பு ஆகிய 3 வகை இருக்கைகள் உள்ளன. இதில் 730 பேர் பயணம் செய்யலாம்.
சொகுசான இருக்கைகள், மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சென்று பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள், பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வசதி, குரல் பதிவு மூலம் தகவல் தெரிவிக்கும் தொழில்நுட்பம், கண்காணிப்பு கேமராக்கள், அவசர காலத்தில் ரயில் ஓட்டுநருடன் பேசும் வசதி என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
இதுதவிர, அவசர தேவைக்காக ஒரு பெட்டி ஒதுக்கப்பட உள்ளது. அதில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் பயணியை படுக்க வைப்பதற்கான படுக்கை, பாலூட்டும் தாய்மார்களுக்கான இடவசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.
மும்பை – அகமதாபாத் இடையே 2 வகையில் புல்லட் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. புல்லட் ரயிலுக்கான கட்டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விமானக்கட்டணம் மற்றும் ரயிலில் முதல் வகுப்பு பயணக் கட்டணம் ஆகியவற்றை ஒப்பிட்டு, அதற்கு இடையேயான தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் எப்போது?: அடுத்தகட்டமாக அகமதாபாத் – டெல்லி, டெல்லி – அயோத்தி, வாரணாசி – ஹவுரா, ஹைதராபாத் – பெங்களூரு, கோன்டியா – மிர்சாபுர், பாட்னா – குவாஹாட்டி, கோன்டியா – மும்பை, மும்பை – ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தப்பட உள்ளன. இறுதியாக, மைசூருவில் இருந்து பெங்களூரு வழியாக சென்னைக்கு வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பணிகளை நிறைவு செய்து ரயில் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டுவர 2051-ம் ஆண்டு இலக்கு நிர்ணயித்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பன்மாதிரி முனையம்: குஜராத்தில் சபர்மதி புல்லட் ரயில் நிலையம், விரைவு பஸ் போக்குவரத்து வழித்தடம், சபர்மதி ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பன்மாதிரி போக்குவரத்து முனையம் அமைக்கப்பட உள்ளது. மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை நினைவுகூரும் வகையில் இதன் முகப்பு உருவாக்கப்பட உள்ளது.
ஒட்டுமொத்தமாக, சபர்மதியின் அனைத்து போக்குவரத்து வழித் தடங்களையும் ஒரே இடத்தில் இணைக்கும் வகையில் இந்த முனையம் செயல்பட உள்ளது. இதை மார்ச் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.