பெங்களூரு:கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரிக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் முற்றியுள்ளது. ரூபா, தன் முகநுால் பதிவில், ‘மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை ரோகிணி அழித்துள்ளார்’ என குற்றஞ்சாட்டிஉள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அறநிலையத் துறை கமிஷனராக இருப்பவர் ரோகிணி சிந்துாரி, 39. இவர், நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்திருந்தாலும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர்.
குணம் அடைய வாழ்த்துகள்
கோலாரில் கலெக்டராக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி, 2015ல் தற்கொலை செய்தார். ரோகிணி உடனான காதல் விவகாரத்தில் தான், அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை, ரோகிணி மறுத்தார்.
இந்நிலையில், இவர் மீது ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, 19 குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதில், ரவி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், ‘மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்தார்’ எனவும் குற்றஞ்சாட்டி, படங்கள் சிலவற்றையும் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதையடுத்து, ரூபா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ரோகிணி கூறினார். இந்நிலையில், ரோகிணியின் அந்தரங்க படங்களை வெளியிட்டது தொடர்பாக, ரூபா மீது ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி, பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில், நேற்று புகார் செய்தார்.
ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து, ரோகிணியிடம் கேட்ட போது, ”ரூபா விரைவில் குணம் அடைய வாழ்த்துகள்,” என்றார்.
புகார்
இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரூபா, நேற்று தன் முகநுால் பதிவில், ‘நான் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரோகிணி கூறி உள்ளார்.
மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை அழித்தது பற்றி ஏதாவது கூறினாரா. சவாலை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை. தன் கணவர் மூலம், என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.
பெண் அதிகாரிகள் மோதலால், அரசுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இருவரிடமும் விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்ப, முதல்வர் பசவராஜ் பொம்மை, தலைமை செயலர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார்.
இந்த பரபரப்பான சூழலில், நேற்று பெங்களூரு விதான் சவுதாவுக்கு சென்ற ரோகிணி சிந்துாரி, தலைமை செயலர் வந்திதா சர்மாவை சந்தித்து, ரூபா மீது புகார் கடிதம் கொடுத்துள்ளார்.
இது பற்றி ரோகிணி கூறுகையில், ”என் மீது ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஆதாரமற்றவை. என் மீது உள்ள தனிப்பட்ட பகை காரணமாக இப்படிசெய்கிறார். இதுகுறித்து தலைமை செயலரிடம்,விளக்கம் அளித்து உள்ளேன்,” என்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில், விதான் சவுதாவுக்கு வந்த ரூபாவும், தலைமை செயலரை சந்தித்து, 35 நிமிடங்கள் பேசினார். ரோகிணி மீது ஏழு குற்றச்சாட்டுகள் அடங்கிய மூன்று பக்க புகார் மனுவை அளித்தார்.
விசாரணை
பின் அவர் கூறுகையில், ”ரோகிணி சிந்துாரி மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அவர் செய்த தவறுக்கு தண்டனை வேண்டும் என்று தான் கேட்கிறேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, 15 நாட்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினேன்.
”அந்த தகவலை அவர்கள், அரசிடம் கொண்டு போகவில்லை. அவரை பாதுகாக்கும் முயற்சி நடக்கிறது. என் புகார் மீது கண்டிப்பாக விசாரணை நடைபெற வேண்டும்.
”ரோகிணியால் என்னை போல் பல பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்தும், தலைமை செயலர் வந்திதா சர்மாவிடம் கூறி உள்ளேன்,” என்றார்.
21_DMR_0011, 21_DMR_0012
மாநில தலைமை செயலர் வந்திதா சர்மாவிடம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா ஆகியோர் தனித்தனியாக புகார் அளிக்க வந்தனர். இடம்: விதான் சவுதா, பெங்களூரு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்