பெங்களூரு: கர்நாடக அறநிலையத் துறை கமிஷனராக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரியின் அந்தரங்க புகைப்படங்களை முகநுாலில் வெளியிட்ட, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு அறநிலையத் துறை கமிஷனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி, 39. இவர், மைசூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது, இம்மாவட்டத்திற்கு உட்பட்ட கே.ஆர்.நகர் ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,வான சா.ரா. மகேஷுடன், மோதல் போக்கை கடைப்பிடித்தார்.
தற்போது, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிவண்ணன் துணையுடன், அவருடன் சமாதானம் பேசி வருகிறார்.
இந்நிலையில், கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றும், ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, 47, நேற்று தன் முகநுால் பக்கத்தில் ‘சா.ரா.மகேஷுடன், ரோகிணி சிந்துாரி சந்திப்பு’ என்ற பெயரில் ஒரு வீடியோவை பதிவிட்டார். ரோகிணியின் அந்தரங்க படங்களையும் அதில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ரூபா எழுதியுள்ள பதிவில், ‘கோலாரில் பணியில் இருந்தபோது, தற்கொலை செய்து கொண்ட ரவி, நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரி.
அவரும், ரோகிணியும் மொபைல் போனில், ‘சாட்டிங்’ செய்த குறுந்தகவல் பற்றி சி.பி.ஐ., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ரவி வரம்பை தாண்டி பேசுகிறார் என்று தெரிந்திருந்தால், அவரது நம்பரை, ‘பிளாக்’ செய்து இருக்க வேண்டும்.
‘ஆனால், ரோகிணி அப்படி செய்யவில்லை. மாறாக தொடர்ந்து பேசி வந்தார். ஒரு கலெக்டர் தம்பதி குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்தி, அவர்கள் பிரிய காரணமாக இருந்தார்’ என்பது உட்பட 19 குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
இந்நிலையில், ”ரூபா, என் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் வைக்கப்பட்ட படங்களை எடுத்து உள்ளார்.
மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, என் தனிப்பட்ட படத்தை நான் அனுப்பியதாக கூறியுள்ளார். அந்த அதிகாரிகள் பெயரை வெளியிட தயாரா.
இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை கண்டு பயப்படாமல் எனது பணியை தொடர்ந்து செய்வேன். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்,” என, ரோகிணி சிந்துாரி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்