கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில், வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி மாசி பெரும் கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் என்ற அமைப்பு கடந்த 85 ஆண்டுகளாக சமய மாநாடு நடத்திவந்தது. இந்த நிலையில், 86-வது இந்து சமய மாநாடு நடத்த அழைப்பிதழ் அச்சிட்டிருந்தது. அந்த அழைப்பிதழில் இந்து சமய மாநாட்டை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏ-க்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்ற இருப்பதாகவும் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவி ராணி ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சமய மாநாட்டை இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று நடத்தும் என்றும், தனியார் அமைப்புகள் மாநாடு நடத்தத் தேவையில்லை எனவும் இந்து சமய அறநிலையத்துறை ஹைந்த சேவா சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, ஹைந்தவ சேவா சங்க மாநாட்டு அழைப்பிதழில் அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் போடாததால்தான் அவர் தலையிட்டு மாநாட்டுக்குத் தடைவிதிப்பதாக பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர். அதே சமயம், கோயிலில் மாநாடு நடத்த தனியார் அமைப்புகள் பணம் வசூல் செய்ய வேண்டாம் எனவும், இந்து சமய மாநாடு என்ற பெயரில் மேடையில் அரசியல் கருத்துகள் பேசுவதாகவும் தி.மு.க தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்து சமய மாநாட்டை நடத்த ஹைந்தவ சேவா சங்கத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். வரும் 1-ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் துறவிகள் சேர்ந்து போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் கொடைவிழாவுக்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருக்கிறது. அதில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆன்மிக மாநாடு நடத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆன்மிக மாநாட்டுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகிப்பதாகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழா பேருரையாற்றுவதாகவும் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், எம்.பி விஜய் வசந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்ளிட்டவர்களும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் இந்து அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்திருக்கின்றன. போராட்டத்தை முறியடித்து போலீஸ் பாதுகாப்புடன் மாநாட்டை நடத்தவும் அறநிலையத்துறை திட்டமிட்டிருக்கிறது. இதனால், மண்டைக்காட்டில் மாநாட்டை தொடங்குவது ஆளுநர் தமிழிசையா, அமைச்சர்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.