புதுடெல்லி: ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இந்தியா வசம் உள்ளன. 2021 டிசம்பரில் முழுமையான பழுது பார்ப்புக்காக, கர்நாடக மாநிலம் காவார் கடற்படை தளத்துக்கு விக்ரமாதித்யா போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த 15 மாதங்களாக அக்கப்ப லில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போர்க் கப்பல் மார்ச் முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.
கடல் பரிசோதனை முடிந்த பிறகு மார்ச் 31 அன்று இந்தக் கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் சீனா பிரச்சினையில் ஈடுபட்டு வருகிற நிலையில், விக்ரமாதித்யா போர்க் கப்பல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவது இந்திய ராணுவத்தின் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இது சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட கப்பல் ஆகும். அப்போது இந்தக் கப்பலின் பெயர் அட்மிரல் கோர்ஷ்கோவ். இந்தப் போர்க் கப்பலை வாங்க இந்தியா 2004-ம் ஆண்டு ஒப்பந்தம்மேற்கொண்டது. மறுசீரமைப்புக்குப் பிறகு இந்தக் கப்பல் 2013-ல் இந்தியா வசம் வந்தது. இந்தியா இதற்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்று பெயரிட்டது.