ஷில்லாங்: பிரதமர் மோடி வரும் 24ம் தேதி மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கான அனுமதியை மாநில அரசு மறுத்துள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும் நிலையில், அங்கு வரும் 27ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து பிரதமர் மோடி வரும் 24ம் தேதி துராவில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் மோடியின் மெகா பேரணி நிகழ்ச்சிக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள துராவின் பிஏ சங்மா ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாததால் அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜ தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா கூறுகையில், ‘பிரதமர் மோடி, வரும் 24ம் தேதி துரா, கரோ மலைப்பகுதியில் நடைபெறும் பேரணி பங்கேற்கிறார். தொடர்ந்து அங்கு நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். பிஏ சங்மா மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் மைதானம் கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை எனக்கூறி அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால் அந்த மைதானம் முதல்வர் கான்ராட் சங்மா கடந்த டிசம்பர் 16ம் தேதி திறந்து வைத்தார். மேகாலயாவில் பாஜகவுக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டுள்ளதால், அதனை தடுக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது’ என்றார்.