சென்னை, நீலாங்கரையில் வி.வி.ஐ.பி-க்கள் வசிக்கும் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தோல் தொழிற்சாலை நடத்தி வரும் சுல்தான் என்பவரின் வீட்டில் கொள்ளை நடந்தது. இவரின் வீட்டைப் போல, இன்னும் சில வீடுகளில் கொள்ளை முயற்சியும் நடந்தது. தொழிலதிபர் சுல்தான் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் நீலாங்கரை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது விலை உயர்ந்த ஜாக்குவார் காரில் கொள்ளைக் கும்பல் வந்திருப்பது தெரியவந்தது. அதனால் போலீஸார், இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து கமிஷனர் சங்கர் ஜிவாலுக்குத் தெரிவித்தனர். உடனடியாக இந்தக் கொள்ளையின் பின்னணியை விசாரிக்க கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் பிரேமானந்த சின்ஹாவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தென் சென்னை இணை கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி, துணை கமிஷனர் மகேந்திரன், உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் மேற்பார்வையில் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம், காவலர்கள் பாலமுருகன், இன்பராஜ் ஆகியோர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது ஜாக்குவார் காரின் பதிவு நம்பர் போலி எனத் தெரியவந்தது. இருப்பினும் சோர்ந்து போகாத போலீஸார், சென்னை நீலாங்கரையிலிருந்து தடா வரையிலான டோல்கேட் பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது தடா டோல்கேட்டில் ஜாக்குவார் கார், கடந்துச் சென்றபோது அதன் உண்மையான பதிவு நம்பர் போலீஸாருக்குத் தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரித்தபோது காரின் உரிமையாளர் உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் விசாரித்தபோது, அந்த காரை காசியாபாத்தைச் சேர்ந்த இரட்டை கொலை வழக்கில் கைதான சுனில்குமார் என்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸார் சுனில்குமாரைத் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து சென்னை நீலாங்கரைக்கு கொள்ளையடிக்க வந்த பீகாரைச் சேர்ந்த இர்ஃபானையும், கொள்ளைத் திட்டத்துக்கு உதவியாக இருந்த புனித்குமார் என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இருவரிடம் விசாரித்தபோது, `காசியாபாத்திலிருந்து சென்னை நீலாங்கரைக்கு ஜாக்குவார் காரில் 80,000 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பிவிட்டுவந்தோம். ஆனால் ஒரே ஒரு வீட்டில்… ஆயிரம் ரூபாய் மட்டுமே கொள்ளையடித்தோம். அந்த விரக்தியில் திரும்பிச் சென்றபோது புனேவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள், நகைகள், பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டோம். ஆனால், ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிக் கொண்டோம்” என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து இருவரையும் புழல் சிறையில் நீலாங்கரை போலீஸார் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் கைதுசெய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் புனே போலீஸார், சென்னை போலீஸாரிடம் கொள்ளையர்களை ஒப்படைக்கும்படி கேட்டிருக்கிறார்கள். அதற்கு சென்னை போலீஸார், நீதிமன்றம் மூலம் கஸ்டடி எடுத்துக் கொள்ளும்படி தெரிவித்திருக்கிறார்கள். சென்னையில் நடந்த கொள்ளை வழக்கில் இன்னும் சிலரைத் தேடிக் கொண்டிருப்பதாக நீலாங்கரை போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “கொள்ளைப் போன தொகை ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் வி.வி.ஐ.பி-க்கள் வீடுகளில் கொள்ளை, கொள்ளை முயற்சி நடந்திருப்பது எங்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அதனால்தான் இந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து கொள்ளைக் கும்பலைத் தேடினோம். இந்தக் கொள்ளைக் கும்பல் வடமாநிலங்களிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சொகுசு காரில் சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. சென்னை நீலாங்கரையில்தான் குறைந்த தொகையை கொள்ளையடித்திருக்கிறது. இதற்காக இந்தக் கொள்ளையர்கள் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி வசதியானவர்கள், வி.வி.ஐ.பி ஏரியாக்களை ஒவ்வொரு மாநிலங்களிலும் கண்டறிந்து கைவரிசைக் காட்டி வருகிறார்கள். தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.