விழுப்புரம் மாவட்டம், கப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், நண்பர்களான மோகன், லாலி கார்த்திக், சத்தியராஜ் ஆகியோர், நேற்று இரவு ஒருகோடி பகுதியில் மது அருந்தியிருக்கின்றனர். அப்போது, சத்தியராஜ் என்பவர் தன்னுடடைய உறவினர் வீட்டு சிறுமியிடம் நட்புரீதியாகப் பழகுவது குறித்து மோகனைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்ட நிலையில், ஒருகட்டத்தில் அது தகராறாக மாறியிருக்கிறது. ஒருகட்டத்தில் லாலி கார்த்திக், சத்தியராஜ் இணைந்து மோகனைத் தாக்கினார்களாம்.

அங்கிருந்து தப்பியோடிய மோகன், ஓரிடத்தில் நிலைத்தடுமாறி விழுந்திருக்கிறார். அவரைத் துரத்திவந்த மற்ற இருவரும் இணைந்து அருகில் கிடந்த செங்கல்லை கொண்டு மோகனைத் தாக்கியிருக்கின்றனர். இதில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் நிர்வாணமாக கிடந்த மோகனின் உடலை மீட்ட காவல்துறையினர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்திருக்கும் போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.