100 அடி பள்ளத்தில் விழுந்த கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து! மூவர் உயிரிழப்பு – 26 பேர் படுகாயம் (Video)


நல்லதண்ணியிலிருந்து, கொழும்பு – மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்ரிகர்கள் குழுவை
ஏற்றி சென்ற தனியார் பேருந்து சுமார் 100 அடி
பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளான சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 26 பேர்
படுகாயமடைந்துள்ளதுடன், அதில் ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நோர்டன்பிரிட்ஜ்
பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நோர்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை பிரதான வீதியில் டெப்லோ
பகுதியில் நேற்று (19.02.2023) இரவு 9.15 மணியளவில் இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.

எதிர்திசையில் இருந்து வந்த மற்றுமொரு பேருந்திற்கு வழிவிட முற்பட்ட போதே குறித்த
பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து
விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 

விபத்தில் காயமடைந்த யாத்ரிகர்களை இராணுவப் படையினர், பொலிஸ் அதிகாரிகள்
மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காயமடைந்த 26 பேர் ஆரம்ப சிகிச்சைக்காக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மற்றும்
பேராதனை போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்தவர்களில் பேருந்து சாரதியும் அடங்குவதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர். 

காணாமல்போனவர் சடலமாக மீட்பு

விபத்தில் இரு இளம் பெண்கள் நேற்று (19) இரவு உயிரிழந்ததுடன், பேருந்தில் பயணித்த
ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று காலை
இராணுவப் படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து
விபத்துக்குள்ளான பேருந்தை சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது காணாமல்போன இளைஞரின்
சடலம் பேருந்திற்கு அடியிலிருந்து மீட்கப்பட்டு வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் உயிரிழந்த இரு யுவதிகளும், இளைஞனும் பண்டாரவளை, மஹரகம மற்றும்
ஹிக்கடுவ, களுபே ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 26, 28 மற்றும் 33
வயதுடையவர்கள் எனவும், யாத்திரிகர்கள் குழு கடந்த 18ஆம் திகதி யாத்திரைக்கு
வந்திருந்ததாகவும், இது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் குழுவாகும்
எனவும் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.