5 தலைப்புகளில் கதைக்களம் மாணவர்கள் கற்பனை திறன் வளர்க்க குறும்பட தயாரிப்பு போட்டி: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

நெல்லை: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாணவர்களால் பள்ளிகளில் நேரடி கல்வி பயில முடியாத சூழல் நிலவியது. இதனால் ஆல்பாஸ் வழங்கும் நிலை ஏற்பட்டது. 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கு நடப்பு கல்வியாண்டில் வருகை தரும் மாணவர்களில் பலருக்கு கற்கும் திறன் குறைந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக தொடக்க நிலை பள்ளி மாணவர்கள் கல்வி கற்க சிரமப்பட்டனர். இந்த குறைகளை நீக்க இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்துகின்றனர்.

2 லட்சம் இல்லம் தேடி கல்வித்திட்ட மையங்கள் மூலம் மாணவர்களுக்கு தன்னார்வலர் பயிற்றுனர்கள் நேரில் சென்று கற்பித்தல் பணியை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் சுமார் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட்டு வருகிறது. கல்வி உபகரணங்கள் மூலமாக நடத்தப்படும் கற்பித்தல் பணிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மேலும் மாணவர்கள் கவனச்சிதறலை தவிர்க்க அவ்வப்போது கல்வி விழிப்புணர்வு குறும்படங்களும் திரையிட்டு காட்டப்படுகிறது. இதில் அடுத்தக்கட்ட நகர்வாக மாணவர்களின் சிந்தனை திறன், படைப்பாற்றல், கற்பனைத்திறனை ஊக்குவிக்க `சிட்டுகளின் குறும்படம்’ என்ற குறும்பட தயாரிப்பு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எனக்குப் பிடித்தவை, எனது ஊர், தன்சுத்தம், குழந்தைகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகிய 5 தலைப்புகளில் மாணவர்களே 3 நிமிடங்கள் அளவிலான குறும்படங்களை தயாரிக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான கதைக்களத்தை மாணவர்களே தயாரிக்கலாம். செல்போன் உதவியுடன் காட்சிகளை படம் பிடித்து தன்னார்வலர்கள் உதவியுடன் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்களுக்கு 24ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். அவர்கள் குறும்பட கதையமைப்பு, ஒளிப்பதிவு, கதாபாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் அளித்து 5 சிறந்த குறும்படங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் இருந்து சிறந்த 5 குறும்படங்கள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.