
500 உள்ளூர் நடன கலைஞர்களுடன் உருவான 'மாவீரன்' பாடல்
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் 'மாவீரன்'. இதனை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். அதிதி சங்கர் நாயகியாக நடிக்கிறார்.
பரத் சங்கர் இசை அமைப்பில் 'சீன் ஆ சீன் ஆ' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் 500 உள்ளூர் நடன கலைஞர்கள் ஆடியுள்ளனர், 150 தொழில்நுட்ப கலைஞர்கள் என ஆயிரம்பேர் பணியாற்றி உள்ளனர். முழுக்க முழுக்க உள்ளூர் நடன கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து இந்த பாடலை உருவாக்கி உள்ளனர். இதற்காக நடன கலைஞர்கள் சங்கம் படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளனது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தப் பாடலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சே இதில் இடம்பெற்றுள்ள அதிக எண்ணிக்கையிலான நடனக்கலைஞர்கள்தான். சென்னையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட குழுவினர் என கிட்டத்தட்ட 1000 பேர் வரை இணைந்து இந்த பாடலை உருவாக்கி உள்ளனர். கபிலன் மற்றும் லோகேஷ் பாடல்களை எழுதியுள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த இந்த பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.
நடன கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த சின்னி பிரகாஷ், பாபு மற்றும் மாரி ஆகியோர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரை பாராட்டினர் மற்றும் சென்னையில் இருந்து முக்கிய நடனக் கலைஞர்கள் மற்றும் குழுவினரைப் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.