ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புநாதன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் பொழுது அவருக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் அதிரடி சோதனை செய்த பொழுது பல கோடி ரூபாய் பணம் சிக்கியது தொடர்பான புகார் நிலுவையில் இருந்து வந்தது.
அதன் அடிப்படையில் சமீபத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பரமத்திவேலூரைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஒருவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதனால் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கரூர் அன்புநாதனை ரூ.6 கோடி பண மோசடி புகாரில் கரூர் அடுத்த வெள்ளியனை பகுதியில் வைத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான கரூர் அன்புநாதனை கைது செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.