திருச்சியில் துரை மற்றும் சோமு ஆகிய இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? சம்பவ இடத்தை ஆய்வு செய்தபின் திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா விளக்கமளித்துள்ளார்.
திருச்சி, உறையூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கோவை, திருச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
திருச்சியில் நகை கொள்ளை சம்பந்தமாக போலீசார் இருவரையும் கைது செய்து நகையை மீட்பதற்காக உறையூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே இருவரையும் ஜீப் வாகனத்தில் அழைத்துச் போலீசார் சென்றுள்ளனர்.
அப்போது, இருவரும் ஜீப்பிலிருந்து போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்று உள்ளனர். கொடூரமான ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தபின் திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, “போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றதால் குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்க சென்ற போது, குற்றவாளிகள் தாக்க முயன்றனர். திருச்சி துப்பாக்கி சூடு சம்பவம் ரவுடிகளுக்கு எச்சரிக்கை பாடமாகும். போலீசாரை தாக்கினால் போலீசார் துப்பாக்கியால் சுடுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று” என்று அவர் தெரிவித்தார்.