சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட தமிழகத்தில் இருந்து 91 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரஸில் மாநில வாரியாக அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பட்டியலை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டு வருகிறார். அவ்வாறு, தமிழகத்தில் 91 அகிலஇந்திய காங்கிரஸ் உறுப்பினர்களைக் கொண்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில், அவரவர் வகிக்கும் (எம்.பி.,எம்எல்ஏ உள்ளிட்ட) பதவிகள் அடிப்படையில் 46 பேர் அகில இந்திய காங்கிரஸ்உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், சு.திருநாவுக்கரசர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குமரிஅனந்தன் பெயர் இடம்பெறவில்லை.
எஞ்சியுள்ள 45 உறுப்பினர்கள் பதவிகளுக்கு, கட்சியில் மாநில அளவில் முக்கிய பதவிகளில் உள்ள துணைத்தலைவர்களான பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மற்றும் கட்சியின் பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாது, 25 நியமன உறுப்பினர்கள் பட்டியலையும் இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், மேற்கூறிய வகைகளில் வராமல் கட்சிக்கு உழைக்கக்கூடிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கே.வீ.தங்கபாலுவின் மகன் கார்த்திக் தங்கபாலு பெயர் இடம்பெற்றுள்ளது.