அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளை 23ஆம் திகதி விவாதத்துக்கு

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய இந்த விவாதம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

1978ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய 2319/80 ஆம் இலக்க வர்த்தமானியில் இது குறித்த கட்டளை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதாரம் தொடர்பான சேவைகள் யாவும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இரண்டு தனியார் உறுப்பினர் சட்டமூலங்களான இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் மற்றும் ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாம் மதிப்பீட்டை அடுத்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளன.

அதனையடுத்து, எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு அமைய பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.