சென்னை: அதிமுகவில் சட்ட விதிகளை மாற்றி தலைமைப் பதவிக்கு ஒருவர் வந்து விட்டார். அவர் பெயரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை என்று பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அதில் பன்னீர்செல்வம் பேசியதாவது:
அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆர் தொடங்கினார். அவர் மறைவின்போது 17 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதன்பின்னர் அதிமுகவை ஜெயலலிதா கட்டிக்காத்து ஒன்றரை கோடி தொண்டர்களாக உயர்த்தினார்.
தர்மயுத்தம் 2.0 தொடக்கம்: கட்சியின் தலைமைப் பதவியை தொண்டர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர்உருவாக்கினார். அதை ஜெயலலிதா கட்டிக்காத்தார். ஜெயலலிதாமறைவுக்குப் பிறகு, தொண்டர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டவிதிகளை மாற்றி தலைமைப் பதவிக்கு வந்துவிட்டார் ஒருவர். அவர் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை. அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார். அவரின் இந்த செயலை எதிர்த்துதான் தர்மயுத்தம் 2.0 தொடங்கி இருக் கிறோம்.
மரியாதை கொடுக்கவில்லை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நமது வேட்பாளரை திரும்பப் பெறுவது எனவும்,இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் எனவும் அறிவித்தோம். ஆனால் அவர்கள்உரிய மரியாதை கொடுக்கவில்லை.
மனதில் கொடூர புத்தியுடன், இந்த இயக்கத்தை தனது இரும்பு பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைக்கின்றார். அதை அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் உறுதியாக உடைத்தெறிவார்கள்.
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வாக்கு கேட்டு செல்லும்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. மார்ச் 2-ம் தேதி வாக்குஎண்ணிக்கையின்போது அது தெரியவரும். அதுவரை நாம் பொறுமையாக இருப்போம். விரைவில் அதிமுக பொதுக்குழு தொடர்பானவழக்கின் தீர்ப்பு வர உள்ளது. அது நமக்கு சாதகமாக அமையும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில், ‘அதிமுகவை சர்வாதிகார மற்றும்சதிகார கும்பலிடமிருந்து மீட்டெடுப்போம். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள், கட்சியின் 50-வது ஆண்டுவிழா என முப்பெரும் விழா மார்ச்மாதம் நடத்த வேண்டும். தொடர்தோல்விகளைச் சந்தித்த அதிமுகவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வோம்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வா.புகழேந்தி, மருது அழகுராஜ் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.