டெல்லி: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது,’ என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், ‘போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது’ என தெரிவித்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.