இந்தியாவின் யூபிஐ-சிங்கப்பூரின் “பே நவ்” நிகழ்நேர பணப்பரிமாற்ற இணைப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியில் இன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணைய மேலாண்மை இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் தங்களது மொபைல் போன்கள் மூலம் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை நடத்தி, இணைப்பை தொடங்கி வைத்தனர்.
எல்லை தாண்டிய யூபிஐ வசதி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கான பணப்பரிவர்த்தனை வசதியை தொடங்கிய முதல் நாடு சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் / மாணவர்கள் உட்பட சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கு இவ்வசதி உதவும். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஃபின்டெக் பயன்களை சாதாரண மனிதர்களுக்கும் குறைந்த செலவில் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்வதன் மூலம் கொண்டுவரமுடியும். க்யூஆர் கோடு மூலம் யூபிஐ பணப்பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்வது சிங்கப்பூரில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களில் உள்ளன.
இந்நிலையில் இரண்டு நாட்டு பிரதமர்களுக்கிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் மூலம் காணொலிக்காட்சி தொடங்கியது. பரஸ்பரம் நலன்சார்ந்த பகுதிகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா – சிங்கப்பூர் இடையே நட்புறவை முன்னெடுத்து செல்வதற்காக பிரதமர் மோடி குறிப்பிட்டு, பிரதமர் லீக்-கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின்கீழ் அவருடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் லீ கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM