இந்தியா-சிங்கப்பூர் இடையே யுபிஐ-பேநவ் இணையவழி பண பரிவர்த்தனை தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா -சிங்கப்பூர் இடையே யுபிஐ -பேநவ் இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுங் ஆகியோர் வீடியோகான்பரன்சிங் மூலமாக நேற்று தொடங்கி வைத்தனர். இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘மிக விரைவில் இந்தியாவின் டிஜிட்டல் வாலட் பரிவர்த்தனைகள், பண பரிவர்த்தனையை காட்டிலும் அதிகரித்துவிடும். யுபிஐ    பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கின்றது” என்றார்.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘யுபிஐ கட்டண முறைகளின் இணைப்பானது இருநாடுகளிலும் வசிப்பவர்கள், எல்லைதாண்டிய பணபரிமாற்றங்களை வேகமாகவும், குறைந்த செலவில் செய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் குறிப்பாக தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து இந்தியாவிற்கு உடனடியாக குறைந்த கட்டணத்தில் பணபரிமாற்றத்தை செய்ய முடியும்.

யுபிஐ-பேநவ் இணைப்பானது  பாதுகாப்பான, உடனடி மற்றும் செலவு குறைந்த எல்லை தாண்டிய பண பரிமாற்றங்களை மொபைல் போனை பயன்படுத்தி செய்வதற்கு உதவும். வங்கி கணக்குகள் அல்லது இ-வாலட்களில் வைத்திருக்கும் நிதிகளை யுபிஐ-ஐடி, மொபைல் எண் அல்லது விபிஏ மூலமாக இந்தியாவிற்கு அல்லது இந்தியாவில் இருந்து மாற்றலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.