காரைக்கால், : இந்தியா, வல்லரசு நாடாக அமையும் என மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
காரைக்கால் என்.ஐ.டி.யில் ரூ.4 கோடி செலவில் கட்டப்பட்ட கி.ரா.ஆடிட்டோரியத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் திறந்து வைத்தார்.
விழாவிற்கு என்.ஐ.டி., இயக்குநர் சங்கரநாராயணசாமி முன்னிலை வகித்தார். பதிவாளர் சுந்தரவரதன் வரவேற்றார்.
மத்திய இணையமைச்சர் முருகன், புதிய ஆடிட்டோரியத்தை திறந்து வைத்து பேசியதாவது:
பாரதியார் கல்வியின் அருமை மற்றும் அவசியத்தை தனது கவிதைகளில் வெளிப்படுத்தி உள்ளார். கல்வியைப் பொறுத்தமட்டில் நம்நாடு, உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அறிமுகப்படுத்தினார். 2014 இல் 7ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டில் 596 மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் 66,000 மருத்துவ படிப்பு இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இப்போது ஜி20 அமைப்புக்கு தலைமை தாங்குகிறது. இந்தியா என்ன சொல்லப் போகிறது என்று உலகமே இப்போது உற்று கவனிக்கிறது. ஒரு இந்தியராக இது நமக்கு பெருமை, கவுரவமாகும்.
பொருளாதாரத்தில் இந்தியா தற்போது உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2027ல் நாம் மூன்றாம் இடத்தை பிடிப்போம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எட்டு ஆண்டுகளில் 80 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது.
தற்போது தாக்கல் செயதுள்ள பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா வல்லரசு நாடாக அமையும் என்றார்.
முன்னதாக, பேராசிரியர் வெங்கடேசன் எழுதிய காரைக்கால் ஒரு தெய்வீக நகரம்’ என்ற நுாலை வெளியிடப்பட்டது.
விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா, மத்திய பொதுப்பணித்துறை சிறப்பு இயக்குனர் ராஜேஷ்குமார் கவுசல், சீனியர் எஸ்.பி.. லோகோஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். என்று அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement