ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களை தாக்கிய திமுகவினர், தேர்தல் ஆணையம் வேடிக்கை – சீமான் கண்டனம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொதுமக்களை அடைத்து வைத்திருந்த நிகழ்வினை வீடியோ எடுத்த செய்தியாளர்களை வெளியே தள்ளி திமுகவினர் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால் பொதுமக்களுக்கு தினமும் பணம் கொடுத்து பல இடங்களில் செட் அமைத்து அதில் இரவு வரை அடைத்து வைப்பதாக திமுகவினர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், களத்தில் நடப்பதை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வெளியே தள்ளிய திமுகவினர் அவர்கள் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்துள்ள
நாம் தமிழர்
கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான்
அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது; ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம்கொடுத்து மக்களை அழைத்துச் சென்று, ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைகளை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரைத் தாக்கியுள்ள திமுகவினரின் கொலைவெறிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆடு, மாடுகளைப்போல மக்களை அடைத்து வைத்து, அவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பறித்து, மக்களாட்சி முறைமையையே குழிதோண்டிப் புதைக்கும் ஆளும் திமுகவினரின் அதிகார அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்குதான், தற்போது உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு நிலைமையை மிக மோசமாக்கியுள்ளது.
திமுக
குண்டர்கள் ஊடகவியலாளர்களையே மிரட்டித் தாக்குகிறார்கள் என்றால், அப்பாவிப் பொதுமக்களை என்ன பாடுபடுத்துவார்கள்? என்பதைத் தேர்தல் ஆணையம் இனியாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆளும் திமுகவினரின் இத்தகைய சனநாயக விரோதச் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், ஊடகவியாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, விரைந்து கைது செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.