ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர்களை தாக்கிய விவகாரத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த மகிமை தாஸை கைது செய்த ரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த மகிமை தாஸ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கிய தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைஞர், தமிழகத்திற்கு நீங்கள் வரக்கூடாது. எங்கள் வேலையை பறிக்கிறீர்கள் என்று கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பெருமை பேசும் தமிழகத்தில், கூலி வேலைக்கு வந்த வட இந்தியர்களை தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தாக்குவதற்கு பின்னால், சில அரசியல் வாதிகளின் பேச்சுக்களின் தூண்டுதல் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, வடமாநில இளைஞர்களை தாக்கிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது தென்னக ரயில்வே காவல்துறை.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், கானை கிராமத்தை சேர்ந்த மகிமைதாஸ் (வயது 38) தான் அவர் என்பதை ரகசிய தகவல் மூலம் அறிந்த ரயில்வே போலீசார், இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.