கரூர் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வர பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் விஸ்வக் நித்தின். இவர் வெங்கமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், விஸ்வக் நித்தின் கடந்த வாரம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொட்டலங்களில் ஸ்டேப்ளர் பின்னிற்கு பதிலாக சணல் நூல்களை தொடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்துள்ளார்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரபு சங்கர் மனு தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவராம பாண்டியன் மற்றும் அதிகாரிகள் மாணவரின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.
அங்கு, அதிகாரிகள் வணிகர் சங்கத்திடமும், சிறு உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் கூறி கரூர் மாவட்டம் முழுவதும் ஸ்டாப்ளர் பின்கனை தவிர்ப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாணவரின் பெற்றோர் மற்றும் மாணவன் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து மனு கொடுத்துள்ளனர்.