புதுடெல்லி: மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் பாஜக தொண்டர்களின் ‘‘விஜய் சங்கல்ப்’’ பேரணி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் நடைபெற்றது. அப்போது அவர்கள், ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்களில் ஈடுபட்டனர்.
ஆனால், பிரதமர் மோடி பதவியேற்று இத்தனை ஆண்டுகளில் எங்களது அரசுக்கு எதிராக 1 ரூபாய் கூட ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு இல்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் அவரது ஆளுகையின் கீழ் இந்தியா உலகளவில் 11-ஆவது இடத்தில்தான் இருந்தது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் அவரை புகழ்ந்து பாராட்டினர். ஆனால், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கீழ்நோக்கி செல்கிறது. அதேசமயம், பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் தலைநிமிர்ந்து நிற்கிறது. காஷ் மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி னால் ரத்த ஆறு ஓடும் என்று கூக்குரல் எழுப்பினர். ஆனால் மோடி அரசு துணிச்சலுடன் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. இன்று வரை யாரும் கூழாங்கல்லைக் கூட வீச துணியவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சி தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு நிலையற்ற தன்மை காணப்பட்டதுடன் அராஜகம் தலைவிரித்தாடியது. தற்போது அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.