சென்னை: காரை உடைத்தால் ஹெலிகாப்டர் வாங்கி கொடுப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி. இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறையில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவருக்குச் சொந்தமான காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். குறிப்பாக, காரினை கல்லாலும், கட்டையாலும் தாக்கி சேதப்படுத்தினர். காரின் இடதுபக்கம் உள்ள முன் மற்றும் பின் டயர்களைக் கத்தியால் கிழித்து சேதப்படுத்தினர். இது குறித்து தடா பெரியசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் இன்று (பிப்.21) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “எங்களின் பட்டியலின பிரிவுத் தலைவர் காரை அடித்து உடைத்ததற்காக வருத்தப்படப்போகும் ஆள் நான் இல்லை. கட்சி நிதியில் இருந்து சேதம் அடைந்த கார் சரிசெய்து தரப்படும்.
மீண்டும் காரை உடைத்தால் கட்சியின் சார்பில் புது கார் வாங்கித் தரப்படும். புதிய காரை உடைத்தால் ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுப்போம். நாங்கள் பயப்படும் கட்சி அல்ல. இது தேசியக் கட்சி. கடுமையாக, தைரியமாக அரசியல் பணியை செய்ய வேண்டும். இந்தக் கட்சி உங்களை பாதுகாக்கும்” என்று அவர் பேசினார்.