குஜராத் பெண் கடத்தல் விவகாரம் வீடு புகுந்து தாக்கி கடத்தும் சம்பவங்களை ஏற்கமுடியாது: பெற்றோர், உறவினர்கள் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: குஜராத் பெண் கடத்தல் வழக்கில், வீடு புகுந்து தாக்கி கடத்தும் சம்பவங்களை ஏற்க முடியாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, பெண்ணின் பெற்றோர், உறவினர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. தென்காசி மாவட்டம், கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் வினித். இவர், இலஞ்சியில் குடும்பத்தாருடன் வசித்த குஜராத்தைச் சேர்ந்த கிருத்திகா படேல் என்பவரை காதலித்து, ஜனவரி20ல் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து ஜன. 25ம் தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை கடத்தி சென்றனர். இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி கிருத்திகாவின் தந்தை நவீன் படேல், தாய் தர்மிஷ்தா படேல், உட்பட 9 பேரும், கைது செய்யப் பட்ட 5 பேர் ஜாமீன் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, ‘‘பட்டப்பகலில் பொது இடத்தில் பலர் முன்னிலையில் வீடு புகுந்து தாக்கி கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற குற்றங்களை கடுமையான குற்றமாகத்தான் பார்க்க முடியும். விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்பதால், தலைமறைவாக இருப்பவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது’’ என்றார். அதனால் முன்ஜாமீன் மனுக்களை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, ஜாமீன் கோரியவர்கள் சிறையில் உள்ள காலத்தை கருத்தில் கொண்டு குற்றாலம் காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.