திருவொற்றியூர்: எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தின் மீது ரயிலில் சென்ற கல்லூரி மாணவி ஆற்றில் விழுந்து பலியானார். மீஞ்சூர் அருகேயுள்ள அத்திப்பட்டு கரையான் மேடு பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மகள் கனிமொழி (18). இவர் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் பி.ஏ எக்னாமிக்ஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரி முடிந்ததும் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ரயில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தின் மீது 4 மணியளவில் சென்று கொண்டிருந்த போது அப்போது அவர் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி கனிமொழி ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்து போனாரா, அல்லது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா, வேறு யாராவது கீழே தள்ளிவிட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
