கோவை மாநகராட்சியில் வெடித்த சிக்கல்; அருந்ததிய வாக்கு வங்கி ஆபத்து… அலர்ட் ஆகுமா திமுக?

கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சுமார் 4,000 குடும்பங்கள் ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலையை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் தினசரி சம்பளத்தை 724 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனப் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வேலைநிறுத்தப் போராட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி போராட்ட குழுக்களை ஒருங்கிணைந்து மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்தை தொழிலாளர் சங்கங்கள் நடத்தின. இதை மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நா.கார்த்திக், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் ஆகியோர் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட வைத்தனர்.

மாநகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை

அப்போது பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் பதிலளித்த ஆணையாளர் பிரதாப், தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காணப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.

சம்பள உயர்வு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் ஜனவரி 2023 முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருவழியாக 648 ரூபாய் சம்பளமாக வழங்க உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் சம்பளமாக நாளொன்றுக்கு 421 ரூபாய் மட்டுமே போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

திருவோடு ஏந்தி போராட்டம்

அதற்கு இ.எஸ்.ஐ, பி.எஃப் பிடித்தம் குறித்து ஆணையாளர் விளக்கம் கொடுத்தார். ஆனால் பணியாளர்கள் ஏற்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கோவை வருகை புரிந்தார். இந்த சூழலில் தூய்மை பணியாளர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர். இது கோவை மாநகரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அருந்ததிய வாக்கு வங்கி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அருந்ததிய மக்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையாக மாறியது. இதனால் அவரது கட்சியை புறக்கணிக்க அருந்ததிய மக்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல் தான் கோவை மாநகரில் தூய்மை பணியாளர்களாக இருக்கும் அருந்ததிய மக்களின் நிலையும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மக்களவை தேர்தல் 2024

தமிழ்நாட்டில் அடுத்த பெரிய தேர்தல் 2024 மக்களவை தேர்தல். இதற்காக திமுக மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் அனைத்து சமூக மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இப்படிப்பட்ட நிலையில் கோவை மாநகராட்சி மீது அருந்ததிய மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தேர்தல் அரசியல்

இது தேர்தல் அரசியலில் பிரதிபலிக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் ஆளுங்கட்சிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது. எனவே கோவை மாநகராட்சியில் நிலவும் சலசலப்பை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.