புதுடில்லி, ”நம் நாட்டில், ‘டிஜிட்டல்’ வாயிலான பரிவர்த்தனைகள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது, மிக விரைவில் ரொக்கப் பரிவர்த்தனையை மிஞ்சும்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
‘மொபைல் போன்’ வாயிலாக பரிவர்த்தனை மேற்கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு முறை, நம் நாட்டில் வெகுவாக பிரபலமடைந்துள்ளது.
பணப் பரிவர்த்தனை
இதன் வாயிலாக மிக சுலபமாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். தங்கள் வங்கிக் கணக்குடன் மொபைல் போனை இணைத்து, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கும் உடனடியாக பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்நிலையில், ஆசிய நாடான சிங்கப்பூரின், ‘பேநவ்’ மற்றும் யு.பி.ஐ., இடையே, எல்லை தாண்டிய இணைப்பு வாயிலாக சுலபமாக பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, சிங்கப்பூரில் உள்ளவர்கள், அந்த நாட்டு கரன்சியான சிங்கப்பூர் டாலரில் அனுப்பும் பணம், இங்குள்ளவர்களுக்கு நம் கரன்சியான ரூபாயில் கிடைக்கும்.
அதுபோல, இங்கிருந்து ரூபாயில் அனுப்பப்படும் பரிவர்த்தனை, சிங்கப்பூரில் உள்ளவருக்கு சிங்கப்பூர் டாலரில் கிடைக்கும்.
இந்த வசதியை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் லுாங், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று துவக்கி வைத்தனர்.
நம் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், சிங்கப்பூரின் நிதி ஆணைய நிர்வாக இயக்குனர் ரவி மேனன், முதல் பரிவர்த்தனையை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நம் நாட்டில் பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் மயமாகி வருகிறது.
மொபைல் போன் வாயிலாக பரிவர்த்தனை செய்வது தற்போது மிகவும் பிரபலமாகவும், அதிகம் பயன்படுத்தும் முறையாகவும் உள்ளது.
௭,௪௦௦ கோடி
கடந்த ௨௦௨௨ம் ஆண்டில் மட்டும், ௧௨ ஆயிரத்து ௬௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள, ௭,௪௦௦ கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை, மிக விரைவில் ரொக்கப் பரிவர்த்தனையை மிஞ்சிவிடும் என, நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். நம் நாட்டில் உருவாக்கப்பட்ட யு.பி.ஐ., பரிவர்த்தனை முறை மிகவும் பாதுகாப்பானது, சுலபமானது.
இந்த வசதி, சிங்கப்பூரில் உள்ள இந்திய தொழிலாளர்கள், மாணவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இங்குள்ள தன் உறவினர்களுக்கு மிக சுலபமாக அவர்கள் பணம் அனுப்ப முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் லுாங் பேசியதாவது:
கடந்த ௨௦௧௮ல் சிங்கப்பூருக்கு வந்தபோது, பிரதமர் மோடி இந்த திட்டத்தை தெரிவித்தார்.
அதன்பிறகு, இரு நாட்டு மத்திய வங்கிகளும் இதை செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை உருவாக்கின. இந்த புதிய வசதி, நம் நாடுகளுக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த புதிய வசதியின் வாயிலாக தற்போது ஒரு நாளில், ௬௦ ஆயிரம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
யு.பி.ஐ., மற்றும் மற்றொரு நாட்டின் பரிவர்த்தனை முறை இடையே, எல்லையை கடந்த பரிவர்த்தனை செய்யும் வசதி முதல் முறையாக சிங்கப்பூருடன் உருவாக்கப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்