தஞ்சாவூர்: `முதல்வர் ஸ்டாலின் மனு வாங்கவில்லை’ – சாலை மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே தூர்வாருதல், மழையில் பாதிப்படைந்த விடுப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினிடம் விவசாயிகள் மனு அளிக்க காத்திருந்த நிலையில், முதல்வர் மனு வாங்காமலேயே திருவாரூர் சென்று விட்டார். இதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு வாங்காததால் போராட்டம் நடத்திய விவசாயிகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றார். தஞ்சாவூரில், மறைந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் உபயதுல்லா வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனைதொடர்ந்து சுற்றுலா மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்ட பின்னர் திருவாரூர் புறப்பட்டார்.

தஞ்சாவூர் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலை முனியாண்டவர் கோயில் அருகே முதல்வர் செல்லும் போது மனு கொடுப்பதற்காக விவசாயிகள் காத்திருந்தனர். ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் வருகைக்காக காத்திருந்தனர். தாங்கள் மனு கொடுக்கும் விபரத்தையும் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் முதல்வர் கார் நிற்கவில்லை மனுக்களும் வாங்கவில்லை.

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் ஸ்டாலின்

இதையடுத்து மனு வாங்காமல் போனதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், “டெல்டாவில் குறித்த நேரத்தில் ஆறு, பாசன வாய்க்கால், ஏரி உள்ளிட்டவற்றை தூர்வார வேண்டும். மதகுகள், தடுப்பணைகள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இதில் விடுப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். உடையார்கோயில் பகுதியில் 75 விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வரும் நிலத்தை மின்வாரியதுறை பயன் பாட்டிற்காக அரசு கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் பார்வையிட்டு சென்றதாக தெரிகிறது. நன்றாக விளையக் கூடிய நஞ்சை நிலத்தை கையகப்படுத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுக்களை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுப்பதற்காக காத்திருந்தோம்.

விவசாயிகள் போராட்டம்

குறித்த நேரத்திற்கு முன்னதாகவே நாங்கள் நின்ற இடத்தை கடந்து முதல்வர் கார் நிற்காமலேயே சென்றது. எப்போதும் விவசாயிகள் சாலையோரத்தில் நின்றால் மனுக்கள் வாங்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த முறை நேரம் இருந்தும் மனு வாங்காமல் சென்று விட்டார். நாங்கள் மனு கொடுக்க வந்திருப்பதை முதல்வர் பயண திட்டத்தை கவனிக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப் படுத்தியிருந்தோம். இந்நிலையில் முதல்வர் மனு வாங்காமல் சென்றது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மனு வாங்குவதற்கும் அதிகாரிகள் முறையான ஏற்பாட்டை செய்யத் தவறிவிட்டனர். இதைக்கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.