ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் உள்ள அரசூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் இருப்பதாகவும் சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர், அவர்களின் தங்குமிடத்தைச் சோதனை செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்த பைகளை சோதனை செய்ததில் புலித்தோல், புலிநகம், மற்றும் எலும்புகள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து, தொடர்புடைய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், வேட்டைக் கும்பலைச் சேர்ந்த அவர்கள் நீலகிரி வனத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிதாகவும் அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளனர். நான்கு பேரையும் நீலகிரி வனத்திற்கு அழைத்து வந்த வனத்துறையினர், வேட்டை சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்ட இடத்திற்கே அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்டைக் கும்பல் ஊடுருவல் குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர், “பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரத்னா, மங்கல், கிருஷ்ணன் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சந்தர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவர்கள் புலி வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். புலியின் உடல் பாகங்களுக்கு சீன கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகிறது.

இந்தியாவில் புலிகளை வேட்டையாடி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் புலியை வேட்டையாடியதாக தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் அழைத்து வந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துைறயினர், நீலகிரி மண்டல வனப்பாதுகாவலர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் பலரும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். பல விஷயங்கள் விரைவில் வெளிவரும்” என்றார்.