திருத்தணியை அடுத்துள்ள ஆர்.கே.பேட்டை தாலுகா, சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார். இவரின் மனைவி காயத்ரி. இவர் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவராஜ், கழுத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார். இது குறித்து யுவராஜின் தந்தை, ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று யுவராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் உத்தரவின்பேரில் ஆர்.கே.பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

யுவராஜின் பிரேத பரிசோதனையில் அவர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் யுவராஜின் மனைவி காயத்ரியிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். அதனால் சந்தேகமடைந்த போலீஸார், காயத்ரியிடம் யுவராஜ் எப்படி இறந்தார் என்று கிடுக்கிப்பிடிக் கேள்விகளைக் கேட்டனர். போலீஸாரின் விசாரணையின்போதே காயத்ரி, கைகளை அறுத்துக்கொண்டார். மேலும், அவர் விஷம் குடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து காயத்ரியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காயத்ரியின் இந்த நடவடிக்கைகள் போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதையடுத்து யுவராஜின் மனைவியிடம் போலீஸார் விசாரித்தபோது அவரை காயத்ரியும், அவரின் ஆண் நண்பர் மற்றும் சிலர் கொலைசெய்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீஸார் கூறுகையில், “கொலைசெய்யப்பட்ட யுவராஜுக்கும் காயத்ரிக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. காயத்ரியிடம் யுவராஜ் மரணம் குறித்து விசாரித்தபோது, கடன் பிரச்னை இருந்ததாக அவர் குறிப்பிட்டார். கடன் பிரச்னைக்கும் யுவராஜின் மரணத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சமயத்தில்தான் யுவராஜ், கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. அது தொடர்பாக காயத்ரியிடம் விசாரித்தபோது அவர் மழுப்பலாகவே பதிலளித்ததோடு, திடீரென தற்கொலை முயற்சி செய்தார். அதனால்தான் காயத்ரியின் மீதான சந்தேகம் வலுத்தது. அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வுசெய்தோம். மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது சில மெசேஜ்கள் அழிக்கப்பட்டிருந்தன.

அதனால் காயத்ரியின் செல்போனில் அழிக்கப்பட்ட தகவல்களை சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு மீட்டோம். அப்போதுதான் காயத்ரியின் இன்னொரு முகம் வெளியில் தெரியவந்தது. காயத்ரி, சென்னையில் படிக்கும்போது சீனிவாசன் என்பவருடன் பழகிவந்திருக்கிறார். ஆனால், காயத்ரியை யுவராஜுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அதன் பிறகும் காயத்ரி, சீனிவாசன் ஆகியோருக்கு இடையே நட்பு தொடர்ந்திருக்கிறது. அதை யுவராஜ் கண்டித்திருக்கிறார். அதனால்தான் யுவராஜைக் கொலைசெய்ய காயத்ரியும் சீனிவாசனும் திட்டமிட்டது தெரியவந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
சம்பவத்தன்று சீனிவாசனும் காயத்ரியும் போனில் பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு சீனிவாசன், தன்னுடைய நண்பர்களான திருத்தணியைச் சேர்ந்த வெல்டர் மணிகண்டன் (27), ஏமநாதன் (23) மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு யுவராஜின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றிருக்கிறார். பின்னர் யுவராஜின் கை கால்களைப் பிடித்துக்கொண்டு அவரின் கழுத்தை நெரித்திருக்கிறார்கள். இதில் யுவராஜ் உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு சீனிவாசனுடன் வந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். காயத்ரியும் யுவராஜ் திடீரென உயிரிழந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியிருக்கிறார். ஆனால் யுவராஜின் கழுத்திலிருந்த காயங்களால் இந்தக் கொலைக் கும்பல் சிக்கிக்கொண்டது. தற்போது காயத்ரி, சீனிவாசன், அவரின் நண்பர்கள் மணிகண்டன், நாதன் ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். இன்னும் சிலரைத் தேடிவருகிறோம்” என்றனர்.