தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் கேட் கீப்பர் பணி செய்து வருபவர் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து குடும்பத்துடன் அங்கு வசித்துவருகிறார். பணி செய்வது பாவூர்சத்திரம் ரயில் நிலையம் என்பதால் டூட்டி நேரத்தில் மட்டும் அங்கு வருவார்.

இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி இரவுப் பணிக்காக 8 மணிக்கு பணிக்கு வந்த அவர், அடுத்த அரைமணி நேரத்தில் அந்த வழியாக வந்த ரயிலுக்காக சாலையிலுள்ள ரயில்வே கேட்டை மூடித் திறந்திருக்கிறார். அடுத்த ரயில் இரவு 12:30 மணிக்குத்தான் வரும் என்பதால் தனது அறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்மநபர் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றிருக்கிறார். அதிலிருந்து தப்பிய அவர், காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வாழவிளைப் பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவரைக் கைதுசெய்தனர். பாவூர்சத்திரத்தில் பெயின்டராக வேலை செய்த அவர், ரயில்வே கேட் கீப்பர் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து பேசிய காயத்ரி, “அன்று இரவு நான் பணியை முடித்துவிட்டு அறைக்குச் சென்றேன். அருகிலுள்ள நெல்லை -தென்காசி சாலையை நான்குவழிப் பாதையாக மாற்றும் பணி நடப்பதால் அறைக்குள் தூசி அதிகமாக இருந்தது.

அதனால் அறையைச் சுத்தம் செய்துவிட்டு இரவு 9:30 மணிக்கு ஓய்வெடுக்கத் தயாராகி வந்தேன். அப்போது யாரோ அறைக்குள் நுழைந்து கதைவை மூடிவதைப் பார்த்ததும் திரும்பினேன். அதற்குள் அந்த நபர் என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்த முயன்றதால் அதிர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததும், அவன் என்னைக் கடுமையாகத் தாக்கினான். அங்கிருந்த லேண்ட்லைன் போன் ரிசீவரால் என் தலையில் அடித்தான். வலியால் துடித்தபோதிலும் அவனிடமிருந்து திமிறியபடி கதவைத் திறந்துவிட்டேன். ஆனால், என்னை வெளியே செல்லவிடாமல் தலைமுடியைப் பிடித்து இழுத்தான்.
கதவைத் திறந்ததால் அவன் வேகமாகத் தலைமுடியைப் பிடித்து இழுத்த வலியையும் பொருட்படுத்தாமல் வெளியில் தப்பியோடினேன். நான் அறைக்குள் இருந்து கத்தியபோது சாலையில் சென்ற வாகனங்களில் இருந்தவர்கள் காதில் விழவில்லை. ஆனால், வெளியே வந்த என்னைப் பார்த்ததும் உதவிக்கு ஓடிவந்தார்கள். அதனால் அந்த நபர் பயந்துபோய் ஓடிவிட்டான்.

நான் தைரியத்தை இழக்காமல் கடைசிவரைக்கும் அந்த நபரை எதிர்த்ததால் இப்போது உயிரோடு இருக்கிறேன். என்னால் முடிந்தவரை போராடியதால் அவன் நினைத்தது நடக்கவில்லை. எனது தலை, கழுத்தில் காயம் இருந்ததால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றேன். கொலை வெறி பிடித்த மிருகம்போல செயல்பட்ட அவனுக்குத் தக்க தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார், பெண் கேட் கீப்பர்.