ஓபிஎஸ் விடுத்துள்ள அறிவிப்பில், “ஈரோடு மாநகர் மாவட்ட கிழக்கு கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் என் தங்கராஜ் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த முருகானந்தம் அப்பொழுது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த பாஸ்கரன் விடுவிக்கப்படுகிறார்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளராக பாஸ்கரன் நியமிக்கப்படுகிறார்.
ஈரோடு மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக ஜெயப்பிரகாஷ் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த தங்கராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்த ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக முருகானந்தம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் செந்தில் முருகன் என்பவரை ஓபிஎஸ் அறிவித்தார்.
இது குறித்து நாளை காலை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக முருகானந்தம் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே வெளியான ஒரு தகவலின்படி, இந்த இடைத்தேர்தலில் செலவிட்ட தொகையை சம்மந்தபட்ட நபர்கள் திருப்பி தர மறுப்பதாகவும் முருகானந்தம் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்து, அவரையும் திரும்பப் பெற்றதால் அதிருப்தி என்று வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.