ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு மூன்று தேதிகளை தேர்வு செய்து மீண்டும் காவல்துறையினரிடம் விண்ணப்பிக்கலாம் என ஆர்எஸ்எஸ் தரப்பிற்கு உத்தரவிட்டனர்.
மேலும் ஆர்எஸ்எஸ் சார்பில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அதில் ஒரு தேதியை தேர்வு செய்து காவல்துறை அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் பிப்ரவரி 12, 19 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகள் முடிவடைந்த நிலையில் மார்ச் 5ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வரும் மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி அடிக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஆளாக நேரிடும்” என எச்சரிக்கும் வகையில் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.