டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. சென்னை உயர்நீதிமன்றம் பெஞ்ச் ‘பொதுக்குழு செல்லும்’ என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்திருந்தது. அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் ஐந்து நாட்களாக விசாரணை நடைபெற்றுவந்தது. ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு, அவைத்தலைவர் மற்றும் நிர்வாகம் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.