சென்னை: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலக தாய்மொழிகள் தினம் நேற்று (பிப்.21) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட சமூக வலைதள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம், உயிர். உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம். தொன்மையும், காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழை காப்போம். தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என மொழி உணர்வால் இணைந்து, மக்கள் வாழ்வு செழிக்க, நம் தாய்மொழியை கண்ணின் இமைபோல காப்போம். உலக தாய்மொழி தின வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார் பாரதியார். தமிழின் புகழை திக்கெங்கும் கொண்டு செல்வோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: வங்கமொழியின் உரிமையை காப்பதற்கான போராட்டத்தில் துப்பாக்கி குண்டுகளுக்கு இன்னுயிரை ஈந்த டாக்கா பல்கலைக்கழக மாணவர்களின் நினைவாக, உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழி உயிரினும் மேலானது என்பதே இந்த நாள் சொல்லும் செய்தி. தமிழகத்தில் தமிழ் அரியணை ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. அதற்காக எந்த ஈகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். தமிழக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். அன்னை மொழிக்கு மரியாதை செய்வோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: மனிதரின் சிந்தனையை தீர்மானிப்பது அவரது தாய்மொழியே ஆகும்.தத்தம் விருப்பத்தில் எத்தனை மொழிகளும் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னைபோல இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மட்டுமே தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும்உலக தாய்மொழி தின வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.