மதுரை: ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு (SCSP) கடந்த 6 ஆண்டுகளாக ஒதுக்கிய நிதியில் ரூ.5,318 கோடி நிதி பயன்படுத்தவில்லை என்பதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிதிராவிடர் மக்களை சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலைகளில் இதர பிரிவினருக்கு இணையாக உயர்த்திட வழிவகுக்கும் ஆதிதிராவிடர் துணைத் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 1980-1981-ஆம் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த 2016-17 முதல் 2021-22 நிதியாண்டுகள் வரையிலான 6 நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, அதிலிருந்து திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை மற்றும் பயன்படுத்தாமல் மீதம் இருக்கும் நிதியின் விபரங்களை மதுரை கே.கே.நகரை சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச்சட்ட தகவல்கள்படி கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.75,930 கோடிகள் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.70,969 கோடிகள் திட்டங்களுக்கு பயன்படுத்தியது போக மீதம் ரூ.5,318 கோடி பயன்படுத்தப்படவில்லை.
அதிகபட்சமாக கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.2,418 கோடி பயன்படுத்தப்படவில்லை. ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 48 துறைத் தலைமைகளை உள்ளடக்கிய 20 செயலாக்கத் துறைகள் வாயிலாக ஆதி திராவிடர் மக்களின் மேம்பாடு மற்றும் நலனுக்காக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நலனுக்காக தீட்டப்படும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட செயலாக்கத் துறைகளால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இத்துறையுடன் இணைந்து செயலாற்றுகின்றனர்.
மாநில அளவில் இத்துணைத் திட்டத்தின்கீழ் திட்டங்களைத் தீட்டுவதற்கும் செயல்படுத்தவதற்கும் ஒருங்கிணைப்புத் துறையாக இத்துறை விளங்குகிறது. இத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ஒருங்கிணைப்பு அலுவலராக (nodal officer) அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மாவட்ட அளவில் இத்திட்டங்களைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் ஆதிதிராவிடர் நல ஆணையர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வளவு பெரிய அளவில் கண்காணிப்பு மற்றும் செயலாக்கத் துறை அதிகாரிகள் பிரதியேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்வளவு பெரிய நிதி பயன்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகள் நிதி கையாளுவதில் திறம்பட செயல்பட தவறிவிட்டார்களா? அல்லது இவ்வாறு செலவு செய்யாமல் பிற துறைகளுக்கு நிதிகளை பகிர்ந்தளிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதனால், ஆதிதிராவிடர் துணைத்திட்டத்தின் கீழ் துறை வாரியாக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு, செலவினங்கள் மற்றும் திட்டங்களின் முழு விபரங்களை ஆதிதிராவிடர் நலத்துறை இணையத்தளத்தில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட வாரியாக பதிவு செய்யும் முறையை வெளிப்படன்மையுடன் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.