புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நோக்கில் ரூ.2.07 லட்சம் கோடியை கடனாக வழங்க விரும்புவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மாசாத்சுகு அசாகவா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று(புதன் கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ”பிரதமர் நரேந்திர மோடியை, மாசாத்சுகு அசாகவா இன்று சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.
சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து, நீர்வழி போக்குவரத்து ஆகிய போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவது, மாநகரங்களுக்கான மேம்பாட்டுப் பணிகள், உள்நாட்டு உற்பத்தி பெருக்கம், மாவட்ட வளர்ச்சி உள்பட இந்திய அரசின் பிரதான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி அளிக்கும் என மாசாத்சுகு அசாகவா தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர்(ரூ.2.07 லட்சம் கோடி) நிதியை இந்தியாவுக்கு வழங்க முன்வருவது குறித்து மாசாத்சுகு அசாகவா எடுத்துரைத்தார்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. சர்வதேச அமைப்பு என்ற வகையில் ஜி20 மாநாடுகளில் பங்கேற்கும் ஆசிய வளர்ச்சி வங்கி, அதில், இந்தியாவின் முன்னுரிமைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறது.
1986 முதல் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 59 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, மனிதவள மேம்பாடு, விவசாயம், இயற்கை எரிவாயு உள்பட 64 திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நதி உதவி அளித்து வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசாத்சுகு அசாகவாவை நிர்மலா சீதாராமன் சந்தித்ததை அடுத்து நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இந்தியா – ஆசிய வளர்ச்சி வங்கி இடையே 2023-27 ஆண்டுகளுக்கான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தனித்துவமான அமிர்தகால முன்னெடுப்புகளான எரிசக்தி மாற்றம், போக்குவரத்து மேம்பாடு, தொழிற்பூங்காக்கள், சுகாதாரம், பட்டுசாலை திட்டம் ஆகியவற்றில் ஆசிய வளர்ச்சி வங்கி முதலீடு செய்யலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்தார். இதனை மாசாத்சுகு அசாகவா வரவேற்றார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.