தமிழகமே உற்று நோக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தொகுதி முழுவதும் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான், பிரேமலதா, ஜி.கே.வாசன், அண்ணாமலை என தொகுதி முழுவதும் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு சென்று விட்டனர். இரண்டாம் கட்டமாக எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரும் 24, 25 ஆம் தேதிகளில் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
இந்தத் தொகுதியை பொருத்தவரை சிறுபான்மையினரின் வாக்குகளும், பட்டியலினத்தவர்களின் வாக்குகளும் வெற்றியை நிர்ணயிப்பதாக உள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சுமார் 40,000 வாக்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இத்தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா, தனக்கு அடுத்த நிலையில் வந்த த.மா.கா.வின் யுவராஜாவை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் திருமகன் ஈவெராவுக்கு இஸ்லாமிய பகுதிகளிலும், பட்டியலின மக்கள் அதிக அளவில் வசிக்கும் பி.பெ.அக்ரஹாரம், வைராபாளையம், கனிராவுத்தர் குளம், கோட்டை, மஜீத் வீதி, கருங்கல்பாளையம், மரப்பாலம், முனிசிபல் சத்திரம், புதுமை காலனி, ராஜாஜிபுரம் போன்ற பகுதிகளின் வாக்குச்சாவடிகளில் தான் அதிக அளவில் வாக்குப்பதிவாகியிருந்தது. இந்த வாக்குகளை மீண்டும் பெறும் வகையில் அப்பகுதியில் முகாமிட்டு தீவிர வாக்குச்சேகரிப்பில் அமைச்சர்கள் சா.மு.நாசர், செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு, தவ்ஹீத் ஜமாத், எஸ்.டி.பி.ஐ. கட்சி, முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். அவ்வப்போது அந்த வார்டு மக்களை சந்திக்கும்போது டீ போட்டு கொடுப்பது, புரோட்டா சுடுவது, இளநீர் வெட்டிக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வாக்காளர்களை கவரும் வித்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல 36-வது வார்டுக்குள்பட்ட பகுதியி்ல் உள்ள மஜீத் வீதி, கனிமார்க்கெட், வ.உ.சி.பூங்கா, காவேரி ரோடு, நேதாஜி ரோடு பகுதிகளில் நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாரும், முன்னாள் அரசு கொறடாவுமான பா.மு.முபாரக் தலைமையில் நீலகிரியைச் சேர்ந்த தி.மு.க.வினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாம் மதத்தின் முத்தவல்லியாக உள்ள முபாரக், வீடு, வீடாகச் சென்று பெண்களிடத்தில் வாக்குகளைச் சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்ததால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை இழக்க வேண்டிய நிலை அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.காவுக்கு ஏற்பட்டது. இம்முறை அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு களம் இறங்கியுள்ளதால், அ.தி.மு.கவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவரும், வீடாகச் சென்று அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய நிர்வாகிகளின் உதவியோடு வாக்குகளை கவர முயற்சி செய்கிறார்.

அதேசமயம் மரப்பாலம், ராஜாஜிபுரம், முனிசிபல்சத்திரம், புதுமைக் காலனி போன்ற பகுதியில் பட்டியல் இனத்தவர்களின் வாக்குகளை கவருவதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முகாமிட்டு தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு துணையாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சியினரும் இஸ்லாமியர்களின் வாக்குகளைச் சேகரிக்க பகீரதப்பிரயத்தனம் செய்து வரும் நிலையில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை வளைக்க நாம் தமிழர் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு விவகாரத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களுக்கு சாதகமாக செயல்படவில்லை எனக் கருதியதன் விளைவாக கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் அதிருப்தி அடைந்து, நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கிறிஸ்தவ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பிரசாரத்துக்காக வந்த சீமானை சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது நாம் தமிழர் கட்சிக்கு தெம்பூட்டியுள்ளது.

அதேசமயம், அருந்ததியர்களை சீமான் இழிவாக பேசியதாகக் கூறி பல இடங்களில் அந்த சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்குகளைச் சேகரிப்பதற்காக நாம் தமிழர் கட்சியினர் சென்ற போது அவர்களை திருப்பி அனுப்பியது அக்கட்சியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், தே.மு.தி.க.வினரும் இந்த வாக்குகளை பெறும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். இருப்பினும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது இவர்களின் பிரசாரத்தில் சுறுசுறுப்பு இல்லை. தொடர்ந்து தலைவர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்டமாக இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், பட்டியல் இன மக்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.