குண்டு போடுவதாக மிரட்டல்: பாஜக கர்னல் பாண்டியன் மீது பாய்ந்த வழக்கு!

ராணுவ வீரர் கொலை சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக முன்னாள் ராணுவ வீரர்களை திரட்டி தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. அதன்படி, நேற்று சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கர்னல் பாண்டியன் மிரட்டல் பேச்சு!

அப்போது பாஜக நிர்வாகியும் ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்னல் பாண்டியன் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். “உலகத்திலேயே ஒழுக்கமான ஆர்மி இந்தியன் ஆர்மி தான். அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நல்லது அல்ல.

இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக சுடவும் தெரியும், குண்டு வைக்கவும் தெரியும். ஆனால், நாங்கள் அதை ஒருபோதும் செய்யப்போவதில்லை. எங்களை சீண்டிப்பார்த்தால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது கர்னல் பாண்டியன் அவர்களையும் விமர்சித்தார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து, பத்திரிகையாளருக்கு பேட்டி கொடுத்த கர்னல் பாண்டியனிடம், ஒரு அரசியல்வாதியை போல நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? தமிழ்நாடு அரசுக்கு இப்படி மிரட்டல் விடுக்கலாமா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை. இனிமேலும் தமிழத்தில் சட்ட ஒழுங்கு நிலை இப்படி தொடர்ந்தால் நிச்சயமாக பாம் வைப்போம்” என்று அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

ஆளுநருடன் சந்திப்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் மனு கொடுக்கும் போதும் இந்த கர்னல் பாண்டியன் உடன் சென்றிருந்தார்.

போலீஸார் வழக்கு பதிவு!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்னல் பாண்டியனுக்கு எதிராக காவல் துறையினர் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.அவரது பேச்சு இந்திய இறையாண்மை, பொது அமைதிக்கு எதிரானது என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.