சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். சேலம் மாவட்ட முன்னாள் எஸ்.பி.,யிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களாவில் கடந்த 2016ல் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் ஆத்தூர் அருகே நடந்த மர்ம விபத்தில் பலியானார். மேலும் கேரளாவைச்சேர்ந்த கூலிப்படை தலைவன் சயான், காரில் தப்பி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி, குழந்தை இறந்தனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மாதத்தில் வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில், 2 மாதம் முடிந்து விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
இதனால் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மர்மமான முறையில் விபத்தில் இறந்த கனகராஜ், ஜெயலலிதா வீட்டில் கொள்ளையடித்த விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை சிலரிடம் கொடுத்ததாக தெரியவந்தது. அவர் யாரிடம், என்ன கொடுத்தார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது. இதனால் ஆத்தூரில் உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்து விசாரித்தனர். சேலம் அரியானூர் பகுதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி சிபிசிஐடி டிஎஸ்பி வினோத் தலைமையிலான குழுவினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஈடுபட்டவர்களின் செல்போன் டவர் திருச்சி பக்கம் காட்டுவதால் சிபிசிஐடி போலீசார் அங்கு முகாமிட்டு இருப்பதாக தெரிகிறது.
மேலும் கனகராஜ் விபத்தில் சிக்கியபோது சேலம் மாவட்ட எஸ்பியாக ராஜன் என்பவர் இருந்தார். அவரிடமும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி லம்பாவிடம் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளனர். சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்டம், சேலம் மாவட்டத்தில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன. ஒவ்வொன்றாக விசாரணை முடிக்கப்பட்டு வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டி விட்டோம். இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்கை முடிக்க இருப்பதால் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.