குருகிராம்: குருகிராமில் கொரோனாவுக்கு பயந்து பெண் ஒருவர் தனது மகனுடன் அறையில் 3 ஆண்டுகளாக அடைந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில் சுஜன் மாஜி- முன்முன் மாஜி தம்பதியினர் 10 வயதுடைய மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா தொற்றின் போது கடை பிடித்த கட்டுப்பாடுகளை கொரோனா குறைந்த பிறகும் முன்முன் மாஜி கடைபிடித்தார். அவருடைய கணவர் தனது மனைவி நாளடைவில் சரியாகி விடுவார் என்று அலுவலகம் செல்லத் தொடங்கினார். ஆனால், அலுவலகம் சென்று வந்த கணவரை முன்முன் மாஜி வீட்டிற்குள் சேர்க்கவில்லை. வீட்டை பூட்டிக் கொண்டு மகனுடனேயே முன்முன் இருந்துள்ளார்.
பின்னர், வேறு வழியின்றி அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சுஜன் தங்கி மனைவி, மகனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஜன், வேறு வழியில்லாமல் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரும் குழந்தைகள் நலத்துறை உறுப்பினர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரதிநிதிகளும் வீட்டுக்கு சென்றனர். ஆனால், முன்முன் கதவை திறக்காமல் அடம் பிடித்தார். இதனால், போலீசார் வேறு வழியின்றி கதவை உடைத்து உள்ளே சென்று அவர்களை மீட்டனர். பின்னர், மருத்துவமனையில் அனுமதித்தனர்.