திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கட்டாயப்படுத்தி மது கொடுத்து நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 2 கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார். இந்தநிலையில் மாணவிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் எர்ணாகுளத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கமாம். இதற்கிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு நண்பர்கள் 2 பேரும் மாணவியை சந்தித்து பேசி உள்ளனர்.
அப்போது அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட செல்லலாம் என்று கூறி அழைத்து உள்ளனர். மாணவியும் அவர்களுடன் ஓட்டலுக்கு சென்று உள்ளார். பின்னர் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் 2 பேரும் சேர்ந்து அவருக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து உள்ளனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விட்டார். தொடர்ந்து 2 பேரும் சேர்ந்து மாணவியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அதன் பிறகு 2 பேரும் சேர்ந்து மாணவியை எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து நர்சிங் மாணவி கோழிக்கோடு கசபா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர். மது கொடுத்து நர்சிங் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.